Sunday, April 13, 2014

தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!



எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ்நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. .இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா?  அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல் வரும் 16 வது மக்களவைத் தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது. இதற்கான விடையை ஒரு வேட்பாளரே சொல்கிறார். அவர் என்ன சொல்கிறார் என இனி பார்ப்போம்.

அரங்கத்தினுள் வாக்காளர்கள் நிறைந்திருக்கிறார்கள். வேட்பாளர் மேடை ஏறுகிறார். வாக்காளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்கிறார்கள். சில நிமிடங்கள் ஆரவாரம் நீடிக்கிறது. மேடைக்கு முன்னாலிருந்தவர்கள் அனைவரும் எழுந்து அவரை வாழ்த்துகின்றனர். “மகத்தான தலைவர் நீடூழி வாழ்க!” என வாழ்த்தொலிகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.

“நன்றாகப் பேசுங்கள் என தலைவர் வேறு சொல்லி விட்டார். எதைப் பற்றி, எப்படி நான் பேசுவது? உப்புச் சப்பில்லாமல் எதைப் பற்றியாவது, ஏதாவது பேசலாம் என்பது உண்மைதான் பேச்சைக் கேட்பவர்களை அது குஷிப்படுத்தலாம் என்பது உண்மைதான். இத்தகையப் பேச்சுகளை பேசக்கூடிய சண்டப் பிரசண்டர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் இப்படி பேசக்கூடிய சண்டப் பிரசண்டர் அல்ல”

இப்படித் தொடங்குகிறது அவரது பேச்சு. மேலும் அவர் தொடர்ந்து பேசுகிறார்.

“நான் ஒன்றும் பிரமாதமாக பேசிவிட முடியாது. இருந்தாலும் நான் என்ன செய்யட்டும்? மேடையில் ஏறிவிட்டேன். ஒரு சில விசயங்களையாவது பேசுகிறேன்.

வாக்காளர்களாகிய நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக முதற் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். தேர்தல் ஆணையம் என்னை வேட்பாளராக பதிவு செய்துள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நம்பிக்கை என்றால் என்ன என்பதை நானறிவேன். இது என் மீது புதிய கடமைகளை - கூடுதலான கடமைகளை, புதிய பொறுப்புகளை - கூடுதலான பொறுப்புகளை அது சுமத்தும் என்பது இயற்கையே. நல்லது. கடமைகளை தட்டிக் கழிப்புது நம்மிடையே வழக்கமில்லை. நான் இந்தக் கடமைகளையும் பொறுப்புகளையும் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
 
என் பங்குக்கு உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். என் மீது நீங்கள் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம். மக்களுக்கான கடமைகளை, தொழிலாளர் வர்க்கத்துக்கான கடமைகளை, விவசாயிகளுக்கான கடமைகளை என்னால் ஆற்ற முடியும். இதை நீங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நம்பலாம்.”

குண்டுகல்யாணம் முதல் குஷ்பூ வரை உப்புச் சப்பில்லாமல் பேசி மக்களை குஷிப்படுத்தக் கூடிய ஏராளமான சண்டப் பிரசண்டர்களை நினைவு படுத்துகிறது இவரது பேச்சு.

மேலும் அவர் தொடர்கிறார்.

“ஜனநாயக நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் அனைவரும் பங்கேற்கும் தேர்தல் முறை இருக்கின்றது; அங்கு தேர்தல்களும் நடை பெறுகின்றன. ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கெல்லாம் தேர்தல்கள் நடக்கின்றன? முதலாளிகள், நிலப்பிரபுக்கள் இன்னும் பிற முதலாளித்துவ திமிங்கலங்கள் வாக்காளர்கள் மீது நிர்ப்பந்தம் செலுத்தும் சூழ்நிலைகளில் அங்கே தேர்தல்கள் நடக்கின்றன.”

நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களை இவரது பேச்சு நினைவு படுத்துகிறதல்லவா?.

வாக்காளர்களை வாழ்த்திவிட்டு அவர் தனது பேச்சை தொடர்கிறார்.

“உங்களுக்கு சில அறிவுரைகள் கூற விரும்பகிறேன். இவை வாக்காளர்களுக்கான ஒரு வேட்பாளரின் அறிவுரைகளாகும். முதலாளித்துவ நாடுகளில் ஒரு விசித்திரமான நிலையை நீங்கள் காணலாம். வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ள விநோதமான உறவுகளைப் பற்றியே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தேர்தல்கள் நடக்கும் வரையில் வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வாக்காளர்கள் மீது அப்படியே பாச மழை பொழிகிறார்கள்; அவர்களிடம் இச்சகம் பேசுகிறார்கள்; விசுவாசமாக இருப்போமென சத்தியம் செய்கிறார்கள்; எல்லா வகையான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளிக்கிறார்கள். அப்போது, எல்லாம் எப்படித் தெரிகிறது என்றால் வாக்காளர்களின் தயவில்தான் வேட்பாளர்கள் முழுமையாக இருப்பது போலத் தெரிகிறது.

ஆனால், தேர்தல்கள் முடிந்து விட்டால் போதும்; வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் போதும், வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையிலான உறவுகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. பிரதிநிதிகள் வாக்காளர்களை சார்ந்திருப்பதற்கு மாறாக அவர்கள் முற்றிலும் சுயேச்சையானவர்களாகி விடுகின்றனர். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது அடுத்த தேர்தல் வரும் வரையில், பிரதிநிதிகள் வாக்காளர்களிடமிருந்து சுதந்திரமாக விடுபட்டவர்களாக, மக்களுடன் எந்த ஒட்டுறவுமற்றவர்களாக இருக்கின்றனர்.
  
வெற்றி பெற்றவர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவலாம்; சரியான பாதையிலிருந்து விலகி பழைமையானதொரு பாதையை மேற்கொள்ளலாம்; எந்த விதமான அரசில் சதிகளிலும்  அவர் ஈடுபடலாம்; எந்த ஒரு குணநலமுமற்றவராக மாறி கெட்டுக் குட்டிச் சுவராகலாம்; அவர் விருப்பம் போல எத்தனை முறை வேண்டுமானாலும் குட்டிக் கரணம் அடிக்கலாம். ஒரே வார்த்தையில் சொல்வதானால், அவர் முற்றிலும் சுயேச்சையானவர்; கட்டு திட்டம் ஏதுமற்றவர்".

இந்தியாவில் நாம் பார்த்து பழகிப் போன வேட்பாளர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்தப் பேச்சாளர்.


தொடரும்……..

தொடர்புடைய பதிவுகள்:


தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

No comments:

Post a Comment