Saturday, December 10, 2011

வளாக நேர்காணலும் வேலை வாய்ப்பும்!

அள்ளித் தரும் ஐ.ஐ.டி
அமெரிக்கா கடனின் மூழ்கி இருந்தாலும், ஐரோப்பா பொருளாதாரம் மந்தமடைந்திருந்தாலும் பெரும் தொழில் நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டி மாணவர்களை கொத்திச் செல்கின்றன.
இந்த ஆண்டு வளாக நேர்காணல் நடைபெற்ற டிசம்பர் முதல் நாளில் மொபைல் தொழில் தொடர்பான அமெரிக்க நிறுவனம் ஒன்று மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.71.34 லட்சம் ஆண்டுச் சம்பளம் தருவதற்கு முன்வந்துள்ளது. அதாவது மாத ஊதியம் சுமார் 6 லட்சம். இப்படி பல்வேறு நிறுவனங்கள் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு லட்சக் கணக்கில் மாத ஊதியம் தர முன்வந்திருக்கின்றன.
அம்மாடியோவ்! தலை சுற்றுகிறதோ! இப்படி லட்சங்களை அள்ளித் தருவதால்தான் நடுத்தர வர்க்கம் ஐ.ஐ.டி கனவில் மிதக்கிறது. யாருக்குத் தேவை குழந்தையின் மழலை? குழந்தை பேச முற்படும் முன்னரே அதன் கழுத்தைப் பிடித்து பிட்ஜியில் (fitge) தள்ளுகிறார்கள்? இறுதியில் ஐ.ஐ.டி யை எட்டமுடியவில்லை என்றாலும் என்.ஐ.டி (NIT) யையாவது கிட்டியதே என திருப்தியடைகிறார்கள்.
இதற்காக பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே! சொல்லிமாளாது. ஐதராபாத்துக்கு அனுப்பி ஹாஸ்டலில் சேர்ப்பவர்கள் ஒருபக்கம். சென்னையில் சேர்த்து தனி வீடு பார்த்து மனைவியை பிள்ளையோடு அனுப்பி விட்டு வாழ்க்கையின் பாதிநாட்களை 'மேரீடு பேச்சுளர்களாக' காலத்தை தள்ளும் தகப்பன்மார்கள் மற்றொரு பக்கம்.
பெற்றோர்கள் சம்பாதித்ததை பிள்ளைகள் விழுங்கிவிட பிள்ளைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்கிவிடுகின்றன.
உச்சிக் குடுமியும் வளாக நேர்காணலும்
ஆனால் இப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் வளாக நேர்காணலில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறதாம் ஒரு கல்லூரி. அக்கல்லூரியில் சேர 'பிட்ஜிக்குச்' செல்ல வேண்டாம், 'பிலஸ் டூ' வும் படிக்க வேண்டாம். உச்சிக் குடுமி இருந்தால் போதுமாம். நமக்குத்தான் உச்சிக் குடுமி வைக்க உரிமை இல்லையே. கலைஞரும்தான் நமக்கு உச்சிக்குடுமியை ஒட்ட வைத்துப் பார்த்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்டார். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் ஒரிஜினல் குடுமிகள் உலுக்கிய உலுக்கலில் நமது ஒட்டுக் குடுமிகள் உதிர்ந்து போயின.
அது என்ன கல்லூரி? எங்கே இருக்கிறது? என்ன படிப்பு என்று கேட்கிறீர்களா? கர்நாடகாவில் பெங்களூர் – மைசூர் சாலையில் இயங்கும் வேதக்கல்லூரி அது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வேலை கிடைத்து விடுகிறதாம். மாதச் சம்பளம் லட்சங்களைத் தாண்டுகிறதாம்.

திருமணமே வேண்டாம் என்று தனியாக வாழ நினைத்தால் வேலை செய்யும் நிறுவனத்திலேயே (கோவில்தான் இவர்களது நிறுவனம்) இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உணவும் இலவசம். அறுசுவை உணவு கிடைக்கவில்லை என்றாலும் பட்டச் சோறு நிச்சயம். திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ நினைத்தால் அதற்கும் வேலை செய்யும் வளாகத்திலேயே ஏற்பாடு செய்து தரப்படும். எண்ணெய், பருப்பு, காய்கறி, உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் காணிக்கையாகவே கிடைத்துவிடும். வாங்கும் சம்பளத்தைத் தொட வேண்டிய அவசியமில்லை. அதை அப்படியே தொடர் வைப்பில் (RD) போட்டுவரலாம்.

நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே வெளிப்பணிகள் செய்வதன் மூலம் மேலும் சில லட்சங்களை சம்பாதிக்க முடியும். இத்தகைய வேலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை கொடுப்பவர்கள் வீடு தேடி  வருவார்கள். இத்தகைய கிராக்கி ஆண்டு முழுக்க உண்டு. இந்தியாவிலும் இத்தகைய வேலைகள் கிடைக்கின்றன. இங்கே ஆயிரங்களைத்தான் பார்க்க முடியும் ஆனால் வெளிநாடுகளில் லட்சங்களை எளிதில் தொட்டு விடலாம்.


அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 'ஆன் டூட்டி ' கிடைக்காதா என ஏங்கும் ஊழியர்களின் புலம்பலைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அயல் நாட்டுக்கே அனாயசமாய் 'ஆன் டூட்டி' சென்று வரும் உச்சிக் குடுமிகளை பார்த்திருக்கிறீர்களா? எமக்குத் தெரிந்த ஒருவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு மாதம் சிங்கப்பூர் 'ஆன் டூட்டி' சென்று ஒரு லட்சத்தோடு திரும்பி வந்தார். உணவு போக்குவரத்து 'ஃப்ரீ'.

மணிஆட்டி மந்திரம் ஓதும் வேலைக்குத்தான் இத்தனை மவுசு. மற்றவர்களுக்குத் தகுதி இல்லை என்றாலும் ஐ.ஐ.டி வாய்ப்பை இழந்த உச்சிக் குடுமிகள் இதற்கு முயற்சி செய்யலாம்.
பொருளாதார நெருக்கடியும் புரோகிதர் தொழிலும்
பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தத் தொழிலில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். பொருளாதார நெருக்கடியால் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் வேலையிழந்து, வீடிழந்து வீதிக்கு விரட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள்  கோவில்களுக்கு படை எடுப்பதாலும், பரிகாரம் தேடி சடங்குகள் சம்பிரதாயங்களை நாடுவதாலும் மந்திரம் ஓதும் தொழில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக உலகப் பொருளாதார ஆய்வு மைய அறிக்கை கூறுகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒருபுறம் ஆலை மூடல்-ஆட்குறைப்பு நடக்கும் அதே வேலையில் மந்திரம் ஓதும் தொழிலுக்கு எப்போதும் ஆள் பற்றாக்குறைதான். அதனால்தான் பல் போன கிழங்களுக்குக்கூட ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மற்ற தொழில்களில் விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படும் போது மந்திரம் ஓதும் தொழிலில் மட்டும் ஓய்வே கிடையாது. சமீபத்தில் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவுக்கு நான் திருவண்ணாமலை சென்றிருந்த போது 76 வயது நிறைந்த முதியவர் மந்திரம் ஓதியதை பார்த்தபோது அது உண்மைதான் என்பது நிரூபணமானது. தள்ளாத வயதிலும் மடியில் தாள்கள் விழுகின்றனவே! இத்தொழிலில் எப்போதும் ‘ஆயிரம் பொன்’தான்.
புதிய பொருளாதாரக் கொள்கை, தாராள மயம், தனியார் மயம், உலக மயம் நீடிக்கும் வரை இந்தத் தொழிலும் செழித்தே வளரும்.
என்ன! நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை!
*****
தொடர்புடைய பதிவுகள்:




No comments:

Post a Comment