Saturday, September 10, 2011

தமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா?

"நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது; மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளதே!"

இப்படி தினமணி கதிரில் (11.09.2011) தனது வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார் கவிக்கோ ஞானச்செல்வன். ஒவ்வொரு வாரமும் தினமணி கதிரில் நான் முதலில் மடிப்பது இவரது "பிழையின்றி தமிழ் பேசுவோம்,  எழுதுவோம்!" என்ற கட்டுரையைத்தான்.

நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகளை களைந்து கொள்ள அவரின் கட்டுரைகள் பெரிதும் துணைபுரிகின்றன. இந்தப் பதிவை அவரிடம் கொடுத்தால்கூட வேற்று மொழிக் கலப்பு, இலக்கணப் பிழை என சில-பல குறைகளை மிக எளிதில் பட்டியலிடுவார். 

இட்லி விற்கும் ஆயாகூட இப்பொழுது ஆங்கிலக் கலப்பின்றி பேசுவதில்லை; பேசுவதில்லை என்று சொல்வதைவிட பேச முடிவதில்லை. அப்படியிருக்க கருவறையில் இருக்கும் போதே ஆங்கிலத்தின் ஒலியை சுவாசிப்போரிடம் எப்படித் தமிழை எதிர்பார்க்க முடியும்?.

தொலைக்காட்சிகளில் தமிழ்க்கொலை

தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் பேசும் போது இத்தகைய தவறுகள் நமக்கு குறையாகத் தெரிவதில்லை. ஆனால் பிறர் செய்யும் போது மட்டும் நமக்கு எரிச்சல் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தொலைக்காட்சி ஊடகங்களில் நடக்கும் மொழிக் கொலையை பார்க்கும் போதும், கேட்கும் போதும் மொழிக் கொலையைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவந்து இவர்களை தண்டிக்கலாமே என்றுகூடத் தோன்றுகிறது.

ஆங்கில மொழிக் கலப்பு எந்த அளவுக்குத் தமிழை கலங்களாக்கியிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டுகள் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. ஆனால் உச்சரிப்பில் நடக்கும் மொழிக் கொலை என்பது மொழியை நேசிப்போரை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வேதனை சில சமயம் வெறுப்பாக மாறி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஆவலைக் குறைத்து நம்மை விரத்திக்குள்ளாக்குகிறது. இது ஏதோ இருவருக்கிடையில் நடக்கும் உரையாடல் அல்ல; மாறாக இது கோடிக்கணக்கான மக்களிடம் செல்கிறது. இதுதான் சரியான உச்சரிப்பு எனத் தங்களை அறியாமலேயே கேட்பவர்கள், பார்ப்பவர்களை பிழையான தமிழுக்கு இட்டுச் செல்கிறது.

ல்லிக்கூடம், மன்வாசனை, பாராலுமன்றம், வெட்றிமான், மள்ளிகைப்பூ - இதன் பட்டியல் வெகு நீளமானது - என உச்சரிக்கும் போது இவர்கள் மீது நமக்கு வருகிற எரிச்சல் இருக்கிறதே வங்கக் கடலில் முங்கி எழுந்தாலும் அடங்குவதில்லை. மக்கள் தொலைக்காட்சி உட்பட அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் இதுதான் நிலை. காணொளிகள் மட்டுமல்ல வானொலிகளுக்கும் இது பொருந்தும்.

தெரியாமல் ஒருவர் செய்கிற தவறை பிறர் சுட்டிக் காட்டினாலோ அல்லது தானாக உணர்ந்தாலோ தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள். ஆனால் வேண்டும் என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதே; மாறாக இத்தகையோருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தால் மட்டுமே மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. 

ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ படிக்கும் மாணவனிடம் உள்ள தமிழ் அறிவும்; ஊராட்சி- நகராட்சி அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவனிடம் உள்ள ஆங்கில அறிவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. பிந்தையவர்கள் 'பட்லர் இங்கிலீஸ்' பேசுகிறார்கள்; முந்தையவர்கள் 'மார்வாடி தமிழ்' பேசுகிறார்கள். இதில் யாரை நொந்து கொள்ள? மாணவர்களையா? அல்லது ஆசிரியர்களையா? அல்லது ஆங்கில வழிக் கல்விக்கு அனுப்பிய தமிழர்களையா? 

மொழியா-வேலையா? எது முதன்மையானது?

மக்கள் ஏன் ஆங்கில வழிக் கல்விக்கு ஓடுகிறார்கள்? தமிழில் படித்தால் வேலை கிடைக்காது,  எதிர்காலம் என்னாவது என்கிற அச்சம் அவர்களை ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இழுத்துச் செல்கிறது. அப்துல் கலாம் எல்லாம் தமிழில் படித்துவிட்டு விஞ்ஞானி ஆகவில்லையா என்றெல்லாம் கேள்வி கேட்பதால் மட்டும் தமிழின் பக்கம் மக்களை ஈர்த்துவிட முடியாது. நான்கூட அன்று ஒரு குக்கிராமத்தில் தமிழ் வழியில் படித்துவிட்டு பின்னர் தலைநகரில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்களை பின்னுக்குத் தள்ளி முதல் மாணவனாக வந்திருக்கிறேன். இது பழைய கதை. தமிழின் மீதுள்ள பற்றால் எனது பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அவர்களின் கண்டனங்களையும் சந்தித்து வருகிறேன். 

மொழி மீதான பற்று என்பது ஒரு பக்கம்; எதிர்கால வாழ்க்கைக்கான தேடல் மற்றொரு பக்கம். இதில் இருபக்கமும் நியாயம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஒன்றை விட்டுக் கொடுத்தால் மற்றொன்று பறிபோகிறது. எதை விட்டுக் கொடுப்பது என வரும் போது பலரும் மொழியைத்தான் விட்டுக் கொடுக்கிறார்கள். இது நியாயமானது இல்லை என்றாலும் அதுதானே எதார்த்தம். அப்படியானால் மொழி அழிந்தால்,  சிதைந்தால் பரவாயில்லையா என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தி படித்தால் தமிழ்நாட்டில் சுண்டல் விற்கலாம்

அன்று இந்தி எதிர்ப்பின் மூலம் எங்களை இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டார்கள் என இன்றும்கூட வசை பாடுபவர்கள் இருக்கிறார்கள். இந்தி படித்திருந்தால் நாங்கள் அப்படியாகியிருப்போம்; இப்படியாகியிருப்போம் என அங்கலாய்க்கும் பேர்வழிகளிடம் நான் அடிக்கடி கேட்பது இதுதான். வட இந்தியாவில் பிறந்து இந்தியிலேயே பேசி, இந்தியிலேயே படித்தும் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் இன்று தமிழகம் வந்து பானிபூரி விற்று தமிழன் கொடுக்கும் காசில் வயிற்றைக் கழுவுகிறானே, அவனுக்கு இந்திப் படிப்பு ஏன் உதவவில்லை என்று? 

இந்தியைத் திணிப்பதனால் இந்தி வாழுமே ஒழிய இந்தியைக் கற்றுக் கொண்டவன் வாழ்ந்து விட மாட்டான். ஆனால் இன்று ஆங்கிலத்தை யாரும் திணிக்கவில்லை. திணிக்காமலேயே ஆங்கிலம் ஏன் ஆதிக்கம் செலுத்துகிறது? அதற்குக் காரணம் ஒன்று அது தொழில் மொழியாகவும் (professional language) நடைமுறையில் ஆட்சி மொழியாகவும் (official language) இருப்பதுதான். தொழில் மொழிதான் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. இது ஆங்கிலத்திற்குப் பொருந்தும் என்பது இன்றைய எதார்த்தம். 

தமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா?

தமிழ் அரைகுறை ஆட்சி மொழியாக மட்டும்தான் இருக்கிறது. அது தொழில் மொழியாகவும் இல்லை. தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிற மொழியே மக்களிடம் இரண்டறக் கலக்கிறது.  தமிழ் தொழில் மொழியாகவும் முழுமையான ஆட்சி மொழியாகவும் மாறாத வரை தமிழ் மொழியின் சிதைவை யாராலும் தடுக்க முடியாது. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மாநில மொழிகளுக்கும் பொருந்தும். மொழிக் கொலைக்காக கண்ணீர் வடிப்பதைவிட தமிழை கோலோச்சும் தொழில் மற்றும் ஆட்சி மொழியாக மாற்றவல்ல ஒரு சமூக அமைப்புக்காக குரல் கொடுப்போம். வேலைவாய்ப்பும் பெருகும்; தமிழும் வாழும்.

ஊரான்

3 comments:

  1. மிக அருமையான கட்டுரை. தமிழைச் சரியாகப் பேசும் நாள் விரைவில் வருமென நம்புவோம்.

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பான ஆக்கம் உளம் கனிந்த பாராட்டுகள் இன்றைய நிலையை மிகவும் நுணுக்கமாக பார்த்து இருக்கிறீர்கள் இருப்பினும் இந்தி படித்தால் உலகையே ஆளலாம் என வரட்டுத்தனமாக கூவுவது சிறுபிள்ளத்தனமே இந்தி படித்தவன் எல்லோரும் தமிழ் நாட்டில் தெருத்தெருவாக எதையோ விற்று கொண்டு வயிற்று பசிக்காக அலைகிரனே அதை பார்க்க வில்லைய அவன் என்ன நேரம் போக வில்லை என்பதர்க்கவா இங்கே வருகிறான். அதுமட்டுமின்றி தமிழில் படித்தால் தன் சிறந்த அறிவாலிய முடியும் என அறிவர்கள் பேசுகிறார்கள்தமிழ் மொழி எமது மொழியாக இருப்பதால் நாம் பேசவில்லை அது நம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது என்பதாற்காக பேசுகிறோம்.

    ReplyDelete
  3. மிக அற்புதமான கட்டுரை. இதைப் படித்தாவது மக்கள் மனம் தமிழ் திசைக்கே மாறும் என்று எதிர்ப்பார்க்கின்றேன். மொழிப் பற்றுள்ள தமிழர்களாக இருந்து தமிழ்மொழியின் உரிமைக்குக் குரல் கொடுப்போம்....இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்.

    ReplyDelete