Tuesday, August 23, 2011

சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் வெளியே செல்லமாட்டேன் என்று அன்னா அசாரே போல சாமான்யன் அடம் பிடித்தால் அனுமதிப்பார்களா? சிறையிலேயே பேட்டி கொடுப்பதும், அதை வீடியோக்களில் பதிவு செய்வதும், அதன் பிறகு ஊடகங்களில் வெளியிடுவதும் போன்ற வசதிகள் பிறருக்கும் நீட்டிக்கப்படுமா?  சட்டத்தையே மீறிவிட்டு நல்ல சட்டம் கொண்டு வருவேன் என்பதுதான் காந்தி காட்டிய வழியா?

டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் 250 பேர், பதினைந்து டிரக்குகள், ஆறு எர்த் மூவர்களைக் கொண்டு இரவோடு இரவாக ராம்லீலா மைதானத்தை அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் அன்னா அசாரேவுக்கு அரசாங்கமே சீர் செய்து சுத்தப்படுத்தி கொடுத்ததைப் போல பிறருடைய போராட்டங்களுக்கும் செய்து தருவார்களா?

ஜன் லோக்பால்காரர்களின் போராட்ட வடிவங்கள் கிரேசி மோகனின் நாடக பாணி நகைச்சுவையையும், மானாட மயிலாட பாணி கோரியோ கிராபர்களின் நடன வடிவமைப்பையும் விஞ்சுகின்றனவா?  மேற்கண்ட போராட்ட வடிவங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள்,  கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட அணிவகுப்புகள் மற்றும் இந்தியா பொக்ரானில் அணு குண்டு சோதனை செய்த போது நடத்தப்பட்ட கொண்டாட்டங்களிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைகளா?

பட்டியானால் வாடிய மக்களின் பசியாற்ற ஏசுநாதர் மீன்களை பல்கிப் பெருக்கியது போல தற்போது நடத்தப்படும் போராட்டத்தில் ஆயிரங்களில் கூடுவோரை பல லட்சங்களில் ஊடகங்கள் பல்கிப் பெருக்கிக் காட்டுவதேன்?

"இந்தியாதான் அன்னா அன்னாதான் இந்தியா!"

நர்மதா அணைக்காக அப்புறப்படுத்தப்பட்டு வாழ வழியற்று நிற்கக்கூட இடமின்றி போராடுவோர் மக்களில்லையா? போபால் விஷவாயுப் படுகொலையில் பாதிக்கப்பட்டோர் மக்களில்லையா? நொய்டாவிலும்- புனேயிலும்- ஹரியானாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் தங்களுக்கு வாழ்வளித்த நிலத்தை உரிய நட்ட ஈடு இன்றி கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மக்களில்லையா? மராட்டியத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மக்களில்லையா?

பழங்குடிகளுக்கு எதிராக நடத்தப்படும் காட்டு வேட்டைக்கு எதிராகவோ சிங்கூர்-நந்திகிராம்-லால்கர்-போஸ்கோ போன்ற இடங்களிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடுவோர் இந்தியர்கள் இல்லையா? கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் நியாயம் ஏதும் இல்லையா?   "இந்தியாதான் அன்னா அன்னாதான் இந்தியா" என முழங்குவோரும் மேற்கண்ட மக்கள் போராட்டங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை?

அன்னா ஒரு சனாதனியா?

ஒவ்வொரு கிராமத்திலும் சேவைத் தொழில் செய்யக்கூடிய தோட்டி- வண்ணான்-அம்மட்டன் என சாதிக்கொருவன் கண்டிப்பாக இருக்கவேண்டும்;  இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில் அடிப்படையிலான வேலைகளையும் கடமைகளையும் முறையாகச் செய்தால் கிராமம் தன்னிறைவு பெறும் என்பது காந்தியின் கொள்கை; இப்படித்தான் அன்னா அசாரேவின் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடைபிடிக்கப்படுகிறதாமே? 

முன்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள்தான் அன்னா அசாரேவிற்குப் பின்னால் அணிதிரள்கிறார்களாமே? ஜன் லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4 00 000 டாலர் மதிப்புக்கு போர்டு பவுண்டேசன் மூலம் பணம் வந்ததாமே?  ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சில கார்பரேட் நிறுவனங்கள் தற்போது நடக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி உதவி செய்கின்றனவாமே?

அன்னா அசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சோடு தொடர்பு இருந்ததாமே? மராட்டியத்தின் ராஜ் தாக்கரேவையும், குஜராத்தின் மோடியையும் அன்னா அசாரே புகழ்தாராமே?அப்படியானால் இவரது போராட்டத்திற்கு சங்பரிவாரத்தின் ஆதரவு உண்டா? எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கும் போது ராம்தேவ், ரவிசங்கர் போன்ற பிரபல சாமியார்களும் மற்ற பிற ஏனைய சாமியார்களும் அன்னாவுக்குப் பின்னால் நிற்பது ஏன்?

அரசியல்வாதிகள்தான் ஊழல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் அன்னா அசாரேவின் ஆட்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை?

இன்று ஜன் லோக்பாலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட திரைத்துறையினர் அரசுக்கு முறையான கணக்குக் காண்பித்து அதற்குரிய வரியை அரசுக்கு செலுத்துகிறார்களா? இதுவரை செய்யவில்லை என்றால் லோக்பால் வந்த பிறகு இனி செய்வார்கள் என்று நம்பலாமா? தற்போது நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வோரில் அரசு அதிகாரிகள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி இருப்பவர்கள் இதுவரை இலஞ்ச ஊழலே செய்யாதவர்களா?

இப்படி அன்னா அசாரேவின் போராட்டப் பின்புலம் குறித்து கேள்விகள் நீள்கின்றன........

மேற்கண்டவாறு கேள்விகள் கேட்பது போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சி மற்றும் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு கேட்கப்பகிறது என்றால் கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றனவே!

ஊழல் ஒரு சட்டப் பிரச்சனையா?

ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா அசாரே நடத்தும் போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டமா? ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிடுமா? ஏற்கனவே இருக்கின்ற ஊழல் ஒழிப்புச் சட்டத்தாலோ அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தாலோ ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை? அந்தச் சட்டங்கள் குறைபாடுடையவைகளா? அவற்றில் மேலும் திருத்தம் செய்தால் ஊழல் ஒழிந்துவிடுமா? நடுவண் அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் லோக்பால் மசோதா குறைபாடுடையதா? அன்னா அசாரேவின் ஜன் லோக்பால் எந்த வகையில் நடுவண் அரசின் லோக்பாலைவிட சிறந்தது? 

தற்போது உள்ள அமைப்பில் ஊழலுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் மீது காவல் துறையும்,நடுவன் புலனாய்வுப் பிரிவும் நேர்மையாகச் செயல்படவில்லையா? லோக்பால் மசோதா நிறைவேறிய பிறகு அதை அமுல்படுத்த அமைக்கப்படும் அமைப்பின் அதிகாரம் என்ன? இந்த அமைப்பும் நேர்மையாகச் செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? இந்த அமைப்பு தவறு செய்தால் அதை யார் தட்டிக் கேட்பது? தன் பெண்ணின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவதற்காக கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி தவம் இருக்கும் காவலர்களும், இலஞ்ச ஒழிப்பு துறை மற்றும் நடுவன் புலனாய்வுப் பிரிவினர் மீதே ஊழல் புகார்களும் மலிந்துவிட்ட இந்நாட்டில் லோக்பால் அமைப்பு மட்டும் தவறு செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கீழமட்ட அரசு அலுவலர் முதல் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையினர், பிரதம மந்திரி என அனைவரையும் லோக்பாலின் கீழ் கொண்டுவரும் போது கார்பரேட் நிறுவனங்கள், ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அன்னா அசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவின் கீழ் ஏன் கொணடு வரப்படவில்லை? டாடா, ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கு ஊழலில் தொடர்பில்லையா? ஒரு பிட்டு செய்தி போடுவதற்கே கவரை எதிர்பார்க்கும் ஊடகத்துறையினருக்கு ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதா? உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில் பணம் திரட்டும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நேர்மையான முறையில்தான் நிதி திரட்டுகின்றனவா? இவர்கள் தவறே செய்வதில்லையா? 

ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சனையா? அல்லது நிதி முறைகேடு மற்றும் இலஞ்சம் மட்டுமா? அல்லது ஏற்றத்தாழ்வான நமது சமூக அமைப்பில் அன்றாடம் நடக்கும் பணத்தின் மூலமானதொரு சமூகப் பரிமாற்றமா? பெரு நகரங்களில் போலிசாருக்கு கப்பம் கட்டிவிட்டு நடைபாதைகளில் விற்பனை செய்து வரும் நடைபாதை அல்லது தரைக்கடை விற்பனையாளர்கள் இனி லோக்பால் பிரதிநிதிகளுக்கும் சேர்த்து கப்பம் கட்ட வேண்டுமா?

கிராம அலுவலரில் தொடங்கி நடுவண் அரசின் துறைச் செயலாளர்கள் வரை அவர்கள் இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை தண்டிக்க நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வழி இருந்தும் இவர்களின் இலஞ்ச ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை?

ஜன் லோக்பால் வந்து விட்டால் மேல்மட்ட ஊழல்கள் மட்டும் ஒழிக்கப்படுமா? அல்லது கிராம நிர்வாக அலுவலர் வரை நடக்கும் இலஞ்ச ஊழலும் சேர்ந்தே ஒழிக்கப்படுமா? குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழில் தொடங்கி வளர்ந்து வாழ்ந்து மடிந்த பிறகு பெறப்படும் இறப்புச் சான்றிதழ் பெறும் வரை கொட்டப்படும் இலஞ்சம் இனி இருக்காதா?

லோக்பால் வந்துவிட்டால் இனி இலஞ்ச ஒழிப்புச் சட்டமும் அரசு நடத்தைவிதிகளில் இலஞ்சம் ஊழல் தொடர்பான விதிகளும் தேவைதானா? அவைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? லோக்பாலை அமுல்படுத்த தனி அமைப்பு கொண்டுவந்த பிறகு இலஞ்ச ஒழிப்புத் துறை தேவைதானா? அதை கலைத்து விடலாமா?

லோக்பால் மசோதா மூலம் ஒருசிலர் கையில் அதிகாரத்தைக் குவிப்பது அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கச் சொன்ன மகாத்மா காந்தியின் சிந்தனைக்கு எதிரானதில்லையா? காந்திய சிந்தனைக்கு எதிரான கருத்தை முன்வைத்துக் கொண்டே தன்னை காந்தியவாதி என்று அன்னா அசாரே சொல்லிக் கொள்வது சரிதானா?

ஜன் லோக்பால் ஒரு கருப்புச் சட்டமா?

ஜன் லோக்பால் மூலம் இலஞ்ச ஊழல் பேர்வழிகள் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது தனக்குப் பிடிக்காத நேர்மையான ஒரு அதிகாரியை பழிவாங்க நினைத்தால் லோக்பாலின் கீழ் மாட்டிவிட்டு அவரை அலைக்கழிக்க விட்டு வேடிக்கை பார்க்கலாமா? அப்படியானால் இது ஒரு கருப்பு மசோதாவாகவும் செயல்படுமா? அப்படி நேரும் போது அரசு ஊழியர்கள் அதிகாரிக்கு ஆதரவாகவும் லோக்பாலுக்கு எதிராகவும் போராட மாட்டார்களா?

லோக்பாலின் கீழ் புகார் கொடுத்தால் புகார் கொடுப்பவர் தன்னைப் பற்றி தெரிவிக்க வேண்டியதில்லை என்றால் புகாரின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறதே? புகார் ஏதும் இன்றி நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்பானதா இது? ஒரு வேளை புகார் கொடுத்தவர் இன்னார்தான் என்று ஏதோ ஒரு வழியில் வெளியே அதாவது ஊழலில் மாட்டிக் கொண்டவனுக்குத் தெரிந்துவிட்டால் புகார் கொடுத்தவனை யார் காப்பாற்றுவார்கள்? இன்று அப்படித்தானே ஊழலைக் கண்டுபிடித்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்,  அதுபோல நடக்காது என்பதற்கு லோக்பாலில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதா?

இலஞ்ச ஊழல் என்பது தனிநபர் சார்ந்த ஒன்றா அல்லது சமூகம் சார்ந்த ஒன்றா? தனிநபர்கள் திருந்திவிட்டால் இலஞ்ச ஊழல் ஒழிந்து விடுமா? அல்லது திருந்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் இலஞ்ச ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுமா?

ஊழலின் ஊற்றுக் கண் எது? ஊற்றுக் கண்ணை அடைக்காமல் மேல் பூச்சு மட்டும் பூசிவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?அதிகார வர்க்கமும் முதலாளிகளும்தான் ஊழலின் ஊற்றுக் கண் என்கிறார்களே, அப்படியானால் முதலாளிகள் இருக்கும் வரை ஊழலும் இருக்குமா?

இப்படி ஏராளாமான ஐயங்கள் எழுப்பப்பட்டாலும் அதற்குரிய பதில் கிடைக்காவிட்டாலும் எப்படியோ ஊழல் ஒழிய வேண்டும் என்றல்லவா வேடிக்கை பார்க்கும் பாமரன் நம்புகிறான். இந்த நம்பிக்கை நாளை வீண் போகுமானால் யார் மீது நம்பிக்கைத் துரோக வழக்குத் தொடுப்பது?

இப்படி ஐயங்கள் நீள்கின்றன..... ஜன் லோக்பால் வந்து விட்டால் ஊழல் உண்மையில் ஒழிக்கப்பட்டு விடுமா? அப்படி நிகழ்ந்து விட்டால் ஞாயிறு நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்.


தொடர்புடைய பதிவுகள்:
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
http://hooraan.blogspot.com/2011/05/blog-post_14.html
காணிக்கை இல்லை என்றால் காரியம் கைகூடாது!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_13.html
யாருக்கும் வெட்கமில்லை!
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html
பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி ...
http://hooraan.blogspot.com/2011/02/200.html



7 comments:

  1. அனைவரையும் சென்றடைய வேண்டிய பதிவு

    ReplyDelete
  2. அன்னா அசாரேயின் ம்றுபக்கத்தை,அவரது ஊரில் ஜாதியின் பெயரால் நடத்தப்படும் அட்டகாசங்களை உலகறியச் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. thirumathi bs sridhar மற்றும் இளங்கோ அவர்களுக்கு,

    இன்னும் நிறைய எழுதலாம். நீளம் கருதி குறைத்துக் கொண்டேன். தாங்கள் தங்களுக்குக் கிடைக்கும் விவரங்களை பின்னூடத்தில் பகிரலாம்.

    ReplyDelete
  4. ஜன் லோக்பால்காரர்களின் போராட்ட வடிவங்கள் கிரேசி மோகனின் நாடக பாணி நகைச்சுவையையும், மானாட மயிலாட பாணி கோரியோ கிராபர்களின் நடன வடிவமைப்பையும் விஞ்சுகின்றனவா?

    அருமையான பதிவு.
    மிக்க நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  5. எனது கட்டுரைகளை விடாது படித்து கருத்தால் ஊக்கப்படுத்தும் ஐயா Rathnavel அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. லோக்பால் சம்பந்தமாக இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன். நீங்கள்தான் இன்னும் எழுத வேண்டும். அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரையை பத்திரிகைகள் பிரசுரிக்க மாட்டார்கள். நாம் தான் நம் இணைய நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவையாக இருந்துகொண்டு நம் பாராளுமன்ற செயல்பாட்டையே முடக்க நினைக்கிறார் அன்னா. மேலும் தகவல் தரவும். நன்றி

    ReplyDelete
  7. இலஞ்சம் மற்றும் ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

    இலஞ்சம் என்பது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி மேல்மட்டம் வரை பொதுமக்களிடம் பெறும் கையூட்டு. எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானால்கூட கையூட்டு வெட்ட வேண்டும். இல்லை என்றால் காரியம் நடக்காது. அடுத்து அதே போன்றதொரு சான்றிதழை விதிமுறைகளை மீறி பெறவேண்டுமானாலும் கையூட்டு வெட்டியாக வேண்டும். என்ன இதற்கு தொகை கூடுதலாக இருக்கும்.

    ஊழல் என்பது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒருசாராருக்கு சலுகை காட்டுவதற்காகவோ அல்லது திட்டத்தை அறைகுறையாக நிவேற்றியோ அல்லது முழுமையாக நிறைவேற்றாமலேயோ ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு சிலர் கபளீகரம் செய்து கொள்வது.

    சுருக்கமாகச் சொன்னால் இலஞ்சம் என்பது பெரும்பாலும் சாமான்யர்கள் சம்பந்தப்பட்டது. ஊழல் என்பது மேன்மக்கள் சம்பந்தப்பட்டது. ஆக இரண்டிலும் மக்கள் பணம்தான் கொள்ளை போகிறது. இலஞ்சம் நேரடியாக நாமே கொடுப்பதால் கோபம் கொப்பளிக்கிறது. ஊழல் மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் அரசாங்கப் பணமாக இருப்பதால் மக்களுக்கு கோபம் இருந்தாலும் அது அவ்வளவாக கொள்பளிப்பதில்லை.

    லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.

    மொத்தமாக ஒழியாது என்றாலும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என சிலர் வாதிடுகிறார்கள்.

    ”நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற வள்ளுவனின் வாக்கை எல்லாவற்றிருக்கும் பொருத்த வேண்டும் என்று சொல்கிகிறவர்கள் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அன்னா அசாரே செய்வது ஒரு ஸ்டண்ட் என்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் தற்போது புரியத் தொடங்கியுள்ளது.

    அன்னா அசாரேவின் போராட்டம் குறித்த எதிர் மறையான கருத்துக்கள் ஊடகங்களிலும் வளைதளங்களிலும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தேடிப்பிடித்து படிக்க வேணடும் என முத்து அவர்களைக் கேட்டுக் கொண்கிறேன்.

    ReplyDelete